ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்று, பின்னர் சாலை மார்க்கமாக பயணம் செய்த பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை தூவியும், ஜெய் ஸ்ரீ ராம் போன்ற முழக்கங்களை எழுப்பியும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற பிரதமர் மோடியும், தொண்டர்களை பார்த்து கையசைத்தார். திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகைக்கு தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சுந்தர் பட்டர் வரவேற்று பூரண கும்ப மரியாதை வழங்கினார். இதுபோன்று ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து, மேள தாளங்கள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீ ரங்கத்தில் பிரதமர் மோடி… கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு!
இந்த நிலையில், வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி, கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தற்போது ரங்கநாதர் கோயில் கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடும் கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் கேட்டு வருகிறார்.
இதற்கு முன்பு கோயில் யானைக்கு உணவளித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். இதனிடையே, பிரதமர் மோடி வருகையையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாமி தரிசனம் முடித்துவிட்டு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார் பிரதமர் மோடி.