திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி!
மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மற்றும் திமுக அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன்பின், நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்கினார்.
இந்த நிலையில், பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.
திருச்சி செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். சாமி தரிசனம் செய்த பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லவுள்ளார். அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.45 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு செல்கிறார்.
பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.!
அங்கிருந்து கார் மூலம் காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். பிரதமர் மோடி 11.00 – 12.30 வரை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார். மேலும், தமிழறிஞர்கள் நடத்தும் கம்பராமாயண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதன்பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதனிடையே பிரதமர் வருகையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் டோல்கேட் மார்கமாக செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீரங்கம் செல்லும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.