3- நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!
கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 18 வயதுக்குட்பட்ட 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை அதாவது ஜனவரி 19-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
தொடக்க விழா முடிந்த பிறகு பிரதமர் மோடி இரவு ஆளுநர் மாளிகை வருகிறார். அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். நாளை மறுநாள் அதாவது ஜனவரி 20-ம் தேதி காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையதிலிருந்து திருச்சி செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.
பின்னர் பிரதமர் மோடி நாளை மறுநாள் மதியம் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். இதைத்தொடர்ந்து, பல வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இரவு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் இரவு தங்குகிறார்.