இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பில் முக்கிய இடங்கள்!
தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். பிரதமர் மோடி பெங்களுருவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
இதன்பின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி இன்று இரவு தங்குகிறார். சென்னை நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி, நாளை காலை 9.20 மணிக்கு திருச்சி செல்கிறார். அங்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதன்பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை பிற்பகல் 2 மணி அளவில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் நாளை இரவு தங்குகிறார். இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி புனித நீராடுகிறார். பின்னர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார்.
Also Read – குஜராத்தில் துயரம்! படகு கவிழ்ந்து 16 பேர் பலி!
இதனை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் காலை 10 மணியளவில் சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு பிரதமர் செல்ல உள்ளார். அங்குள்ள கோதண்டராமர் கோயில் பூஜையில் பங்கேற்றபின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்படுகிறார். தமிழ்நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் ஜனவரி 21ம் தேதி டெல்லி திரும்புகிறார் பிரதமர் மோடி.
எனவே, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை, திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மதுரை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.