ஸ்ரீ ரங்கத்தில் பிரதமர் மோடி… கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு!
இன்று இரண்டாவது நாள் பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வந்தடைந்தார். பிரதமர் வருகையால் திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர், ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் தற்காலிக ஹெலிபேட் தளத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் மலர்களை தூவியும், ஜெய் ஸ்ரீ ராம் போன்ற முழக்கங்களை எழுப்பியும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். காரின் கதவை திறந்து நின்றபடி சென்ற பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி!
கோயில் கோபுரத்துக்கு முன்பு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வருகையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்ரீரங்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரங்கநாதரை தரிசிக்க ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தடைந்தார் பிரதமர். எனவே, இன்னும் சற்று நேரத்தில் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதாவது, கோயிலில் பிரதமர் மோடி 11 – 12.30 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார். மேலும், தமிழறிஞர்கள் நடத்தும் கம்பராமாயண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கு பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.