பிரதமர் வீடு: ரூ.209 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 60% நிதியும், மாநில அரசு 40% நிதியும் வழங்குகின்றன.
சென்னை : பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், 2016 -17ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. வீடு இல்லாத ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய, நிலையான வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்திற்கான நிதியில், 60 சதவீ தத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்டுவதற்கு, முதல் தவணையாக ரூ.209 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் ஒரு வீட்டிற்கு, 2.83 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அர சின் பங்கு 1.11 லட்சமும் மாநில அரசின் பங்கு 1.72 லட்சம் ரூபாயும் வழங்குகின்றன.
அதே நேரம், நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்டுவதற்கு, மொத்தம் 836.82 கோடி ரூபாய் செல்வாகும். தற்போது முதல் கட்டமாக, மத்திய அரசின் பங்கு ரூ.125.52 கோடி, தமிழக அரசின் பங்கு ரூ.83.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.