மீண்டும் தமிழகம் வரும் பிரதமர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! 2 நாள் பயணத்தில் முக்கிய நிகழ்வுகள்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிப்.27ம் தேதி தமிழகம் வருகிறார். சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா சென்னை வருகை தந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடியும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார்.
இந்த ஆண்டு 2-வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அதன்படி, வரும் 27ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி திருப்பூர், மதுரை மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதில் குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா வரும் 27ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அன்றைய தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு மதியம் 2.30 மணி அளவில் செல்கிறார்.
Read More – பரந்தூர் விமான நிலையம் – நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பு வெளியீடு!
இதன்பின் அங்கிருந்து சாலை மார்க்கமாக`என் மண், என் மக்கள்’ நிறைவு விழா நடைபெறும் மாதப்பூர் பகுதிக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதனை முடித்துக்கொண்டு அன்றைய தினம் மாலை ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி, டிவிஎஸ் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து வரும் 28ம் தேதி தூத்துக்குடி செல்லும் பிரதமர், காலை 9.30 மணிக்கு அங்குள்ள வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, காணொளி வாயிலாக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
இதன்பின், அன்றைய தினம் திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வழியாக டெல்லி செல்கிறார். எனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவது முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.