நாளை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி களத்தில் உள்ளனர்.

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ இவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தையடுத்து நாளை (பிப்ரவரி 5ஆம் தேதி) அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதியாக, 46 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
ஈரோடு இடைத்தேர்தலில் இருமுனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி, திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 53 பள்ளிகளுக்கு மட்டும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பி.3,4,5 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான பிப்.8 ஆகிய 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.