“தேர்தலில் வெற்றி பெற விஜய் ‘இதை’ செய்ய வேண்டும்” பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ்!
ரூமில் இருந்து பேசி வருவதை தவிர்த்து பொதுவெளியில் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டும் என விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அட்வைஸ் செய்துள்ளார்.

மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது தான் பெரும்பாலான தவெக மாவட்ட செயலாளர்கள் பதவிகளை நிரப்பி வருகிறார். இன்னும் சில மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் நியமனம், அடுத்து வட்டம், நகரம், ஒன்றிய பொறுப்புகள் என உட்கட்சியை பலப்படுத்தி வருகிறார்.
அதே நேரம், மாநாடு, புத்தக வெளியீடு நிகழ்ச்சியை தவிர்த்து அண்மையில் தான் பரந்தூர் மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்தித்தார் தவெக தலைவர் விஜய். பெரும்பாலும் மக்களை சந்திக்காமல் அரசியல் செய்து வருகிறார் என்ற விமர்சனம் தான் அவரை நோக்கி கூறப்படுகிறது. இதனை தவிர்க்க அவர் மக்களோடு களத்திற்கு வர வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் விருப்பமாக உள்ளது.
அதே கருத்தை தான் அட்வைசாக தேமுதிக போர்த்துசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது தெரிவித்துள்ளார். அவர் இன்று மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ” விஜயயை ‘செந்தூர பாண்டி’ படம் மூலமாக பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர் கேப்டன். அவர் எப்போதும் கூறுவது போல எங்கள் வீட்டு பிள்ளை தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு அதனை நான் விஜயிடமே பலமுறை கூறியுள்ளேன்.
அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய பிசினஸ் இருக்கிறது. அதனை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் அதனை பாராட்ட வேண்டும். ஆனால் அவர் அரசியலில் என்ன சாதிக்க போகிறார், என்ன சரித்திரம் படைக்க போகிறார் என்பதை உங்களை போல நானும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறேன்.
அவர் அரசியல் களத்தில் ஜெயிக்க நான் கூறும் ஒரே அட்வைஸ், நாளுக்கு நாள் ரூமில் இருந்து பேசி வருவதை தவிர்த்து, பொது வெளிக்கு வர வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். மக்கள் பிரசனைகளை கையில் எடுக்க வேண்டும். அப்போது தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். தேர்தலில் ஜெயிக்க இது தான் நான் அவருக்கு கூறும் அட்வைஸ். ” என தனது அறிவுரையை பிரேமலாதா விஜயகாந்த் கூறினார்.