37 அதிமுக எம்.பி.க்களால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்ற பிரேமலதாவின் பேச்சை ஏற்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்
- தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
- 37 அதிமுக எம்.பி.க்களால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்ற பிரேமலதாவின் பேச்சை ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.அதில் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை,குழப்பமுமில்லை.அரசியல் ரீதியாக தேமுதிகவை திமுக பழிவாங்குகிறது.திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது.கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார். ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. .தேமுதிகவை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது.துரைமுருகன் பேசியது வெட்கக்கேடானது. உட்கார்ந்த இடத்திலிருந்து அவர் தூங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கேன். அதற்காக இப்படியா உளற வேண்டியது. திமுக என்றாலே “தில்லுமுல்லு கட்சி” என்று அன்றே சொன்னார் எம்.ஜி.ஆர்.
எதிரியாக இருந்தாலும் வரவேற்பதுதான் தமிழர் பண்பாடு .துரைமுருகன் நடந்து கொண்டது சரியில்லை.
தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது, நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும் .கடந்த தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைத்தது.
ஜெயலலிதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி வைத்தது தான் காரணம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் பிரேமலதா கருத்து தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சிலர் பொறுமை இழந்து ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர். எம்ஜிஆர் சொன்னதுபோல் அனைவருக்கும் பொறுமை வேண்டும்.37 அதிமுக எம்.பி.க்களால் எந்த பயனும் கிடைக்கவில்லை என்ற பிரேமலதாவின் பேச்சை ஏற்க முடியாது. பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே தலைமைச்செயலகத்தில் முதல்வரை கே.சி.பழனிசாமி சந்தித்தார். தேமுதிக விவகாரத்தில் மறப்போம்-மன்னிப்போம் என்பதே நிலைப்பாடு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.