கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவ்வாறு, மையங்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்படும் போது பாதுகாப்பான குடிநீர், தரமான உணவு வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.
பாதிப்புக்குள்ளாக கூடிய ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, நிவாரண பொருட்கள் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் போது முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடகிழக்கு பருவமழையொட்டி பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிய முதலமைச்சர், நீர் நிலைகள் சீரமைப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/cN5CcmqZFF
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 24, 2021