கறுப்பர் கூட்டம் கார்த்திக்கு நிபந்தனை முன் ஜாமீன்- சென்னை உயர் நீதிமன்றம்!
கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த சேனலின் அட்மின் செந்தில் வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவரும், அவர்களுக்கு ஸ்டுடியோ வாடகைக்கு தந்தவருமான கார்த்திக் என்பவர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் எனக் கூறி, கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த கார்த்திக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.