“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
2026 தேர்தலில் தவெக வெற்றிபெறும் அப்போது இங்கு தோனியை விட நான் பிரபலமாகி இருப்பேன் என தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பேசினார்.

காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு அழைப்பாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில், ” நிறைய பேர் நினைக்கிறார்கள், நான் (பிரசாந்த் கிஷோர்) தவெக-வுடன் சேர்ந்துவிட்டேன். அதனால் தவெக மிகப்பெரிய வெற்றி பெரும் என்று. ஆனால், உண்மை என்னவென்றால் உங்கள் (தவெக) வெற்றி என்னால் நடந்ததாக இருக்காது. அது நீங்கள் செய்தது, உங்கள் தலைவர் செய்தவற்றை தான் சேரும்.
கடந்த 4 ஆண்டுகளாக நான் தேர்தல் வியூக வகுப்பளராக செயல்படவில்லை. இறுதியாக 2021 தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டேன். பிறகு நான் ஓய்வை அறிவித்துவிட்டேன். நான் தேர்தல் வியூக வகுப்பாளராக இங்கு வரவில்லை. நான் எனது நண்பர் விஜய்க்கு உதவி செய்ய வரவில்லை. அவருக்கு எனது உதவி தேவையில்லை. நான் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வியூகம் வகுத்துள்ளேன். விஜயை நான் அரசியல் தலைவராக பார்க்கவில்லை. அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை. அதனால் தான், நான் இங்கு வந்துள்ளேன்.
தவெக ஒரு அரசியல் கட்சி அல்ல. அது லட்சக்கணக்கானோரின் அரசியல் முன்னெடுப்பு. இது மாற்றத்திற்கான நேரம். அதனால் தான் நான் இங்கு வந்துள்ளேன். இந்த மாற்றம் எல்லாருக்கும் எல்லாம் என்பதில் இருந்து துவங்கியது. நான் நிறைய முறை தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றியுள்ளேன். அடுத்த வருடம் தவெக கண்டிப்பாக வெற்றி பெரும். அடுத்த வருடம் இங்குள்ள நிறைய பேர் வெற்றி பெற்று இருப்பீர்கள். நான் இந்தியா முழுக்க பல்வேறு அரசியல் சம்பவங்களை பார்த்துள்ளேன். தமிழ்நாட்டில் அரசியல் ஊழல் அதிகரித்துள்ளது. “என்று குறிப்பிட்டு பேசினார்.
அடுத்ததாக, எனக்கு தெரியும் இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த எம்.எஸ்.தோனி மிக பிரபலம் என்று. என்னால் நிச்சயம் சொல்ல முடியும் அடுத்த வருடம் தவெக எனது தேர்தல் வியூகம் மூலம் வெற்றி பெற்றால், நான் தோனியை விட மிக பிரபலமாக மாறுவேன் என்று.” என பிரசாந்த் கிஷோர் பேசினார்.