அம்ருதா தனது கணவரின் மறைவைக் கண்டு துவண்டுபோய் விடவில்லை. இதுபோன்ற ஆணவக்கொலைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடத்துவேன். வாழ்நாள் முழுவதும் இதற்காகப் போராடுவேன் என்று சூளுரைத்தார். தமிழகத்தில் இதேபோன்ற ஆணவக்கொலைக்கு தனது அன்புக்கணவர் சங்கரைப் பலிகொடுத்தவர் கவுசல்யா.
அந்த நேரத்தில் வெட்டப்பட்ட கவுசல்யாவும் உயிருக்குப் போராடி மீண்டார். உடுமலை சங்கருக்கு எதிராக நடந்த ஆணவக்கொலை தமிழகத்தை உலுக்கியது. அவர் மரணத்துக்குக் காரணமான தனது உறவினர்கள் தண்டனை பெறுவதில் கவுசல்யா உறுதியாக இருந்தார். சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கும் தூக்குத்தண்டனை, ஆயுள் தண்டனை கிடைத்தது.
தனது குடும்பத்தாரே சிறைக்குப் போகக் காரணமானவர் என்று வலைதளங்களில் கவுசல்யாவைப் பலரும் விமர்சித்தனர். கவுசல்யா கணவரை இழந்து அவரது உயிரும் போகும் நிலையில் மீண்டவர். அவரது மன வலியிலிருந்து மீண்டு துவண்டு விடாமல் கணவர் பெயரில் அறக்கட்டளை அமைத்து சாதிய ஒழிப்புக்கு எதிராகத் துணிந்து போராடி வருகிறார்.
அம்ருதா விவகாரமும் கவுசல்யாவைப் போன்றத. அன்புக்கணவரை அவரிடமிருந்து கூலிப்படை மூலம் கொடூரமாகப் பறித்தார் தந்தை. கணவரை இழந்து வாடும் அம்ருதாவிற்கு ஆறுதல் சொல்லும் விதமாக நேற்று அவரை கவுசல்யா நேரில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மிர்யலகுடா பகுதியில் உள்ள பிரனயின் வீட்டில் நிகழ்ந்தது. கவுசல்யா, தன்னுடைய வழக்கறிஞர் மற்றும் சாதியத்துக்கு எதிரான போராளிகளுடன் வந்திருந்தார். ‘தைரியத்துடன் இருங்கள்’ என்று அம்ருதாவுக்கு அறிவுரை கூறிய கவுசல்யா, தனது கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட வீடியோவை அம்ருதாவிடம் காட்டினார்.
”வழக்கில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர், எப்படிப் போராடினர்?” என்ற அம்ருதாவின் கேள்விக்கு, கவுசல்யாவின் வழக்கறிஞர் சட்ட ரீதியிலான பதில்களைத் தந்தார்.”உங்கள் கணவரின் கொலைக்கு என்ன காரணம், சாதியா?” என்றார் அம்ருதா. ”சாதி, சா’தீ’ மட்டும்தான் காரணம்” என்று பதிலளித்துள்ளார் கவுசல்யா. அவருக்குப் பதிலளித்த அம்ருதா, ”பிரனயின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் தக்க தண்டனை கிடைக்க வேண்டும்.
அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது. அவர்கள் யாராவது வெளியே வந்தால், என்னைக் கொலை செய்யக்கூட முயற்சிப்பார்கள். என்னுடைய குழந்தைக்குக் கூட அவர்களால் ஆபத்து ஏற்படும்” என்றார்.அதற்குப் பதிலளித்த கவுசல்யா, ”நீதிமன்றத்தில் நடந்த எல்லாவற்றையும் நீங்கள் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றார். ”நிச்சயம் செய்வேன்” என்று அம்ருதா பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் அம்ருதாவிற்கு தனது முகநூல் மூலம் ஆறுதலும் உத்வேகமும் ஊட்டும் பதிவை கவுசல்யா வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. சாதியக் கொடுமைக்கு எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் உங்களை எங்கள் பிள்ளைபோல் பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
கவுசல்யாவின் முகநூல் பதிவு:
தோழர் அம்ருதாவிற்கு,
நாம் கொண்ட காதலுக்கு உண்மையாகவும் உறுதியாகவும் இருப்பதற்கே கூட இந்தச் சாதியச் சமூகம் இரக்கமின்றித் தடை போடுகிறது. காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற அன்பும் நம்பிக்கையும் சார்ந்த நமது உள்ளுணர்வைப் பெற்றோரால் புரிந்துகொள்ளவே முடியாது அமிர்தா.
ஏனென்றால் நம் மீது கொண்ட அன்பைவிட அவர்களுக்குச் சாதி ஆணவம் பெரிது. பிரனய் உன் வாழ்வில் கிடைத்த மற்றொரு தாயாகவே இருந்திருப்பான் என்பது எனக்கு நன்கு புரியும். இன்று நீ காட்டும் உறுதி அதை மெய்ப்பித்துக் கொண்டுள்ளது. உனக்கு ஒரு குழப்பம் இருந்திருக்கும். ஏன் நம் பிரனயை இவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று.
பாவம் பெற்றோரின் சாதி வெறி உன்னையே புரிந்துகொள்ள விடவில்லை. பிறகு எப்படி பிரனயைப் புரிந்து கொள்ளச் செய்யும். நம் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்த பெற்றோர் இதைச் செய்வார்கள் என்று நினைத்திருக்க மாட்டாய் . சாதி வெறிக்கு முன்னால் அன்பு தோற்றுப் போகும்.
பிரனயின் காதலும் தாய்மையும் உன்னை எழுந்து வீறு நடை போடச் செய்யும் என்று நான் அறிவேன். பிரனயின் குழந்தை கருவில் வளர விடக்கூடாது என்பவர்களை எதிர்த்து நிற்கிறாய். அவர்களின் சாதி வெறிக்கு நீ கொடுத்த சவுக்கடி இது. அதோடு இன்று உன் வலியைத் தம் வலியாகப் பார்க்கும் இதயங்கள் உன்னைச் சூழ்ந்திருக்கும்.
இனிதான் நீ நிறைய சமூக உறவுகளைப் பெறுவாய். நீ தனித்து விடப்படவில்லை. பிரனய் உனக்கு குழந்தையை மட்டுமல்ல புதிய உலகத்தைப் பரிசாகத் தந்து போயிருக்கிறார். பிரனயை விட்டு நீ எப்படி இருக்கிறாயோ அப்படித்தான் நானும் நின்றேன். வாழ்வே இருண்டது போல் இருந்தது. ஒருநாள் கூட அவனைப் பிரிந்து இருக்கத் துணியாதவள்தான் இன்று இரண்டரை வருடங்களுக்கு மேல் பிரிந்து கிடக்கிறேன்.
பிரனய்க்கான நீதியாக கொலைக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். ஆனால் அதோடு இந்த நீதிப் போராட்டம் நின்றுவிடுவதல்ல. சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைக்கச் செய்ய வேண்டும். நம் வாழ்நாள் முழுவதும் சாதியை ஒழித்துக்கட்ட சமூகப் போராளியாக காலமெல்லாம் பங்களிக்க வேண்டும்.இவைதான் அவருக்குச் செய்யும் வாழ்நாள் நீதியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்கும் பணியில் இருக்கிற நாங்கள் ஒவ்வொருவரும் உன்னை எங்கள் பிள்ளை போல் கருதுகிறோம். இங்குள்ள சாதி ஒழிப்பு ஆற்றல்கள் உன்னோடு தோழமை கொண்டிருக்கிறோம் என்ற செய்தியை என் வழியாக உனக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைக்க உன்னோடு நான் கைகோத்து இறுதிவரை பயணிப்பேன் என்ற உறுதியைத் தந்து விடைபெறுகிறேன்.”இவ்வாறு கவுசல்யா பதிவிட்டுள்ளார்.
DINASUVADU
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…