சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின், குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி.!
கன்னியாகுமரியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீண்டகரை-பி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கடல்சீற்றம் நடந்தது. அப்போது கடல்நீர் ஊருக்குள் புகுந்த போது, அப்பகுதியில் உள்ள மரியதாஸ் என்பவருடன் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மரியதாஸின் மகன் பிரதீப் அஸ்வின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் லிஸ்டன் என்பவரது மகனான லிபின் மற்றும் சிலுவை என்பவரது மகனான விதுல் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மரணமடைந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அத்துடன் இத்துயர சம்பவத்தில் மிகுந்த வேதனையடைவதாகவும், இறந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமுற்ற இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு.பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 10, 2020