இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த எஸ்.ஐ.. தண்டனையாக கிடைத்த பவர் கட்!
இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் மின் வாரிய ஊழியர், காவல் நிலையத்திற்கு மின் வசதியை துண்டித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ. வாகன சோதனை நடத்தினார். அப்பொழுது உரிய ஆவணங்களின்றி, 3 பேருடன் பயணம் செய்த ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார். அது, மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரின் இருசக்கர வாகனம் என விசாரணயின்போது தெரியவந்தது.
போலீசாரின் இந்த செயல் குறித்து உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் சைமன் புகாரளித்தார். அதன்பின், உதவி மின் பொறியாளரின் உத்தரவின்படி, கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின் இணைப்பை துண்டித்தார். இதனால் கூமாப்பட்டி காவல் நிலையம் மின் வசதி இல்லாமல் அவதிப்பட்டது.
2 மணி நேரதிற்கு பின், காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கூமாப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர், எஸ்.பி.யிடம் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.