சீருடைப் பணியாளர் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு..!
ஏப்ரல் 21-ஆம் தேதி நடக்க இருந்த சீருடைப் பணியாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய காலியிடப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடல்கூறு அளத்தல் உடல் திறன் போட்டி ஆகியவை கடந்த மார்ச் 8-ம் தேதி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் பங்கேற்றதால் மார்ச் 8-ம் தேதி முதல் நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 21 முதல் நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருந்த தகுதித்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.
கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.