செந்தில்பாலாஜி ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
அதேநேரம் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், 3-வது முறையாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய கோரி நீதிபதி அல்லி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக தாமதமானதால் வழக்கு விசாரணையை சிறிது தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நீதிபதி பதில் மனு தாக்கல் செய்ய சொல்லியும் இன்னும் செய்யவில்லை. பதில் மனுதாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்கு வழக்கு தொடர்ந்தீர்கள்? என்று எழுப்பினார். பின்னர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டிருந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.