பதவி வெறி., கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல – சிபிஎம் மாநில செயலாளர்
தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறது. அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தைக்’ காத்திட வேண்டுமென விசிக தலைவர் தொல் திருமாவளவன் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பெரியகுளம் நகராட்சி துணை தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்தவரை தேர்தெடுக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், விசிக தலைவரை தொடர்ந்து தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.
இருப்பினும், கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒரு சில இடங்களில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக எதிர் அணியினர் பலனடைந்ததையும் பார்த்தோம். இப்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்காக மறைமுக தேர்தல்கள் நடந்துள்ளன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே பேசி உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த உடன்பாடு பெரும்பாலும் அமலாகவில்லை.
திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கியதுடன் பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர் கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், இதர கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் இடங்கள் அனைத்திலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக, எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டுள்ள போக்கு அனுமதிக்க முடியாததாகும். பதவி வெறியில் சிலர் ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதிக்கும் விதமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.
இது ஆரோக்கியமான அரசியலின் வெளிப்பாடு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.