போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Pope Francis died

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், ”புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,“இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தவர் போப் பிரான்சிஸ். ஏழை, எளிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மீது அன்பு காட்டி அரவணைத்தவர். அவரது மறைவால் மிகுந்த வருத்தமடைந்தேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில்,”கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில், உலக கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மீக சேவைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்த போப் ஆண்டவரின் புனித ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சற்று இளைப்பாறட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில்,”கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் ஃபிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு மிகுந்த வருத்தத்துடன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் மாபெரும் இழப்பு. கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தள பதிவில்,”போப் பிரான்சிஸ் மறைந்தார் என்ற | செய்தி மிகப்பெரும் துக்கத்தைத் தருகிறது. உலகில் சாதி மதங்களால் எந்த இரத்தக்களறியும் ஏற்படக்கூடாது. சமாதானம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்’ என்று அருள்மொழி வழங்கியவர் அவர், அவரின் மறைவுக்கு துயர் நிறைந்த என் ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்