குடும்ப வறுமை… சைக்கிள் மூலம் வழைப்பழம் விற்கும் 5ஆம் வகுப்பு மாணவன்…
குடும்ப வறுமை காரணமாக வாழைப்பழம் விற்று பெற்றோருக்கு உதவும் 5ஆம் வகுப்பு மாணவன்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் கணேஷ்வரி தம்பதி. இவர்களுக்கு முனிஸ்வரன், கோகுல் என்ற 2 மகன்கள். இதில் முனிஸ்வரன் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். முருகன் மற்று கணேஷ்வரி தம்பதி ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி ஒட்டும் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடக்கமடைந்தது.தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில மாதங்களாக தொழில் இல்லை என்பதால் மீட்டும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் ஈடுபட போதிய பணம் இல்லாத காரணத்தினால் முருகன் தீக்குச்சி தயாரிக்கும் ஆலைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.கணேஷ்வரி அப்பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள், தேங்காய், முகக்கவசம் விற்பனை செய்து வருகின்றார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த தம்பதியினர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், தந்தைக்கு குறைவான வருமானமும், தாய் பழ விற்பனையும் சரியாக நடைபெறவில்லை என்பதனை பார்த்த 5ஆம் வகுப்பு படிக்கும் முனீஸ்வரன், தன்னுடைய குட்டி சைக்கிள் மூலமாக வாழைப்பழம் விற்பனை செய்து பெற்றோருக்கு உதவி வருகிறார். இவர், சரியாக தினமும் காலை, மாலை 2 மணி நேரம், தனது சைக்களில் சிறிய பெட்டியை கட்டி, அதில் தாயிடமிருந்து வாழைப்பழம் வாங்கி கொண்டு அருகில் இருக்கும் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வருகிறார். தினமும் இதன் மூலம் கிடைக்கும் 200 ரூபாயை தாயிடம் கொடுத்து தனது பெற்றோருக்கு உதவி வருகிறார் சிறுவன் முனீஸ்வரன்.