தரம் அற்ற குடியிருப்புகள் – குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!
புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம் கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன. இந்த நிலையில், குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்த குற்றசாட்டு அடிப்படையில், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரம் அற்ற குடியிருப்புகளை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர்
இதன்பின் பேசிய குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இக்கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக்குழுவின் ஆய்வறிக்கையை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஐ.ஐ.டி. நிபுணர் குழு குடியிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்றும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.