பாஜக குறித்த பொன்னையன் கருத்து, அவரது சொந்த கருத்து – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் பேட்டி
பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஓபிஎஸ், கடந்த 29 மற்றும் 30-ஆம் தேதி நடைபெற்ற அம்மா பேரவையின் திறன் மேம்பாட்டு கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல என்று பேசிய கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையனின் கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய இபிஎஸ், அதிமுக சார்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஆர்.தர்மர் ஆகிய இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் இருவரின் வெற்றிக்கு துணை நின்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாமக மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
இதன்பின் பேசிய அவர், பாஜகவின் சட்டமன்ற கட்சி தலைவர் அதிமுகவுக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியமில்லை, அதிமுக சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மக்களின் பிரச்னையை புள்ளி விவரத்தோடு சட்டமன்றத்தில் எடுத்துரைத்துள்ளோம். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாகவும் குற்றசாட்டினார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன, அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.