பொங்கல் சிறப்பு தொகுப்பு – ரேசன் கடைக்கு முதல்வர் திடீர் விசிட்!
சென்னை:ரேசன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து தீவுத்திடல் பகுதியில் முதல்வர் திடீர் ஆய்வு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கடந்த ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.அதன்படி,சென்னை தலைமை செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முதல்வர் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் அனைத்து ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் சிறப்பு தொகுப்பில் உள்ள பொருட்கள்:
அதன்படி,பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராச்சை 50 கிராம், பாசிப்பருப்பு 1/2 கிலோ, நெய் 100 கிராம், ஏலக்காய் 10 கிராம், மஞ்சள்தூள் 10 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம், கடலைப்பருப்பு 1/4 கிலோ, மிளகு 50 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், புளி 200 கிராம், உப்பு 1/2 கிலோ, கோதுமைமாவு 1 கிலோ, மல்லுத்துள் 100 கிராம், ரவை 1 கிலோ, உளுத்தம்பருப்பு 1/2 கிலோ,கைப்பை ஒன்று, முழு கரும்பு ஆகிய பொங்கல் தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து,21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு முறையாக மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும்,ரேசன் கடைக்கு கட்டப்பை கொண்டு வர வேண்டும் என்று சில இடங்களில் மக்கள் வற்புடுத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஸ் சட்டப் பேரவையில் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில்,நீட் விலக்கு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து,தனது ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே அன்னை சத்யா நகர் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடைக்கு சென்று,21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு தரமானதாகவும்,முறையாகவும் மக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிகழ்வின்போது,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் முதல்வருடன் உடனிருந்தனர்.
பின்னர்,ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பொங்கல் சிறப்பு தொகுப்புகளை முறையாக பொங்கல் பைகளில் வைத்து வழங்குமாறு ரேசன் கடை ஊழியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.