தமிழர் திருநாளான பொங்கலன்று உழவுத் தொழிலை வணங்குவோம் !

Default Image
தமிழர் திருநாள்… தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும்.
சௌரம் (சூரிய வழிபாடு), சைவம் (சிவ வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு) என ஆறு வகையான வழிபாட்டு முறைகள் இங்கே உள்ளன. இவற்றில் ஒன்றை பின்பற்றி, அதன்படி ஒரே தெய்வத்தின் திருவடியை நாடி வழிபடுபவர்கள் உண்டு. ஆனால், ஆறு வகை வழிபாட்டுக்காரர்களும் ஏற்றுக் கொண்ட ஒரே தெய்வம்… சூரிய பகவான்!
நாம் அன்றாடம் கண்ணால் தரிசிக்க முடிகிற தெய்வமும் இவர்தான்! விடியலுடன் தொடர்பு கொண்ட சூரிய பகவானை முன்னிறுத்திக் கொண்டாடுகிற பண்டிகைதான், பொங்கல் திருநாள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்!
விடியலுக்கும் சூரியனாருக்கும் தொடர்பு உண்டு. அதேபோல், தை மாதப் பிறப்பின் போதே பொங்கல் பண்டிகை நன்னாளும் பின்னிப் பிணைந்தே வருகிறது.
சூரியன், தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். அதுவே உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. உத்தர அயனம் என்றால், வடக்குப்புற வழி, வடக்கு வாசல் என்று பொருள். சூரியன், கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்றாலும், தட்சிண அயனம் எனும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாகவும் சஞ்சரிக்கிறார் சூரிய பகவான்!
அதாவது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கள கரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம். இறப்பது கூட உத்தராயணத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம்! எனவேதான், தட்சிணாயன காலத்தில், பாரதப்போரில் அடிபட்டு விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ய காலம் வரும் வரை காத்திருந்தார். பிறகே இறந்தார் என்கிறது புராணம்! ஆக, தை மாதமும் பிறப்பும் ரொம்பவே சிறப்பு என்று போற்றுகின்றனர்.
உத்தராயன புண்ய காலம் தை மாதம் தொடங்குகிறது. இந்த மாதப் பிறப்பானது, பொங்கல் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது!
பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாக, போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப் படுகிறது. பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் முகமாக போகி நாளில், முதல் நாளன்று அதாவது மார்கழி மாதக் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது.
Related image
அப்போது, பழைய, தேவையற்ற பொருட்களை தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்போம். நம்மை வாழ விடாத, நமக்கு உதவாத, கெடுதல் செய்யக் கூடிய தீய குணங்களை எல்லாம், தூய்மையான அறிவு எனும் ஞானத்தீயில் இட்டுப் பொசுக்கி, உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் தாத்பரியம்! தீயவற்றைப் போக்குவதால், இது ‘போக்கி’ எனப்பட்டு, ‘போகி’ என மருவியது என்கிறார் திருச்சி திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.
தை மாதப் பிறப்பு. பொங்கல் திருநாள். உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்துகிற உன்னதப் பண்டிகை. தை மாதம் தொடங்கும் வேளையில், அறுவடை முடிந்திருக்கும். விளைந்த பொருட்களைக் கொண்டு, எல்லா உயிர்களும் வாழ அருள்புரியும் சூரியனை வணங்குவதுதான் உழவர்களின் பண்பாடு. கலாச்சாரம். சடங்கு சாங்கியங்கள்!
Image result for பொங்கலன்று சூரியனை வழிபடுதல்
உழவர்களைப் போல் நாமும் பொங்கல் கொண்டாடுகிறோம். சூரிய நமஸ்காரம் செய்கிறோம். வீட்டில் உள்ள பசுக்களை நீராட்டி, அலங்கரித்து, பூஜிக்கிறோம். அப்படியே… உழவர்களையும் நன்றி தெரிவித்து வணங்குவோம். அவர்களின் தொழிலான விவசாயம் செழிக்கவும் காடு கழனியெல்லாம் நீர் நிறைந்திருக்கவும் பிரார்த்திப்போம்!
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்