வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் நாளை வரை விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்திருந்தது.
ஜனவரி 10ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த நாட்களில் பெற முடியாதவர்கள், ஜனவரி 14ம் தேதி பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.!
இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000-ஐ நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்துவது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகையான ரூ.1,000 பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அடுத்தாண்டு பொங்கல் தொகுப்பில் சக்கரைக்கு பதில் வெல்லம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லத்துக்கு பதில் சக்கரை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் கூறியுள்ளார்.