“பொங்கல் தொகுப்பு சாப்பிடுவதற்கே லாயக்கற்றது;வெள்ளை அறிக்கை தேவை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Default Image

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து,திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரமற்ற பொருட்களை,எடை குறைவான பொருட்களை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம்.மக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்று தி.மு.க. நினைத்திருக்கக்கூடும்,அதனுடைய விளைவுதான் 1,250 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிப்பு எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,தரமற்ற,மட்டமான பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததார்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது? இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஓபிஎஸ் கூறியிருப்பதாவது:

திமுக-மீது விமர்சனம்:

“2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தி.மு.க. அரசால் வழங்கப்பட்டன.பொங்கல் தொகுப்பில் இருந்த பெரும்பாலான மளிகைப் பொருட்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றது என்றும்,இதில் உள்ள பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்றும் பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன.நானும் இதுகுறித்து விரிவாக அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.இன்னும் சொல்லப்போனால்,நடுநிலையாளர்கள், தி.மு.க.விற்கு ஆதரவாக பேசியவர்கள்கூட இந்த விஷயத்தில் தி.மு.க.வை விமர்சித்தனர்.

சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டியது சென்றுவிட்டது:

இந்தச் சூழ்நிலையில்,இதுகுறித்து மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால்,உடலுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய பொருட்களை விநியோகம் செய்தால் கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுபோல் உள்ளது.ஒரு நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை கொடுக்கப்படும் போது பொருட்களின் தரம்,எடை ஆகியவை குறித்து அதற்கான ஒப்பந்தப் புள்ளியில் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்தத் தரத்தையும்,எடையையும் கொள்முதல் ஆணை பெற்ற நிறுவனங்கள் பின்பற்றியதா என்பதை தி.மு.க. அரசு சோதனை செய்யவில்லை என்பதும், இதற்குக் காரணம் ‘சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டியது சென்றுவிட்டது’ என்பதும்தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேலும் கூறுகையில்,”சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததோடு,அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.இது சப்பைகட்டும் செயல். உண்மை நிலை என்னவென்றால், பெரும்பாலான இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டும்,எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு.மாண்புமிகு அமைச்சரின் பதிலைப் பார்க்கும்போதே இதில் முறைகேடு நடந்திருப்பது என்பது ஊர்ஜிதமாகிறது.

தவறு நடந்து இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?:

கடைசியாக,”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 20 கிராம் முந்திரி,20 கிராம் திராட்சை,5 கிராம் ஏலக்காய் 45 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும்,ஆனால் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் 50 கிராம் முந்திரி,50 கிராம் திராட்சை,10 கிராம் ஏலக்காய் 62 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒரு கிலோ பருப்பு 120 ரூபாய் 50 காசுக்கு வாங்கப்பட்டதாகவும்,தி.மு.க. ஆட்சியில் 78 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும்,இதில் மட்டும் 74. கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டதாகவும் கூறி இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மக்களுக்கு நல்ல தரமான பொருட்களை வாங்கி வழங்க வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முனைப்பு காட்டியது என்பதும்,தி.மு.க. தரமற்ற, மட்டமான பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்ற ஆர்வம் காட்டியது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட பொருட்கள் குறித்து தி.மு.க. உட்பட யாரும் எவ்விதக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்பதை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு நிறுவனம் ஒரு பொருளை 5 அல்லது 10 ரூபாய் குறைத்துக் கொடுக்க ஒப்புக் கொள்ளலாம்.ஆனால்,42 ரூபாய் குறைத்து கொடுக்க ஒப்புக்கொள்கிறது என்றால் அதனுடைய தரம் எப்படி இருக்கும்,எடை எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும், அந்த நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கிய ஆட்சியாளர்களின் நோக்கம் என்ன என்பதையும் அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். அதனால்தான் 2022 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு குறித்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.இதுகுறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் இன்று விவாதிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.அப்படியென்றால்,தவறு நடந்து இருக்கிறது என்பதுதானே அர்த்தம்?

1,250 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிப்பு-வெள்ளை அறிக்கை தேவை:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தன.மக்கள் பணம் மக்களைச் சென்றடைந்தது.மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்கள்.அதே சமயத்தில், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பொருட்கள் எதுவுமே மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை.இன்னும் சொல்லப் போனால்,மக்கள் அந்தப் பொருட்களை பயன்படுத்தவே இல்லை என்பதுதான் உண்மை.

இந்தப் பொருட்களை பயன்படுத்தி பல இடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டது போல தங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவத்திற்கு வேறு செலவழிக்க வேண்டுமே என்று பயந்து பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தவில்லை. மொத்தத்தில் மக்களின் பணம்,அரசினுடைய பணம் கிட்டதட்ட 1,250 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு விட்டது.சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது.தேர்தலின் போது வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஏமாற்றியதைப் போல,தரமற்ற பொருட்களை,எடை குறைவான பொருட்களை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம்.மக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்று தி.மு.க. நினைத்திருக்கக்கூடும், அதனுடைய விளைவுதான் 1,250 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிப்பு.

எனவே,இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் யாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன? ஒரே பொருள் இரண்டு, மூன்று நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதா? அப்படி என்றால் ஏன் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டது? தமிழ்நாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியில் கலந்து கொண்டதா? கலந்து கொண்டது என்றால் எந்தெந்த நிறுவனங்கள் கலந்து கொண்டன? அவர்கள் குறிப்பிட்ட விலை என்ன? பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்த நிபந்தனைகள் ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? தரம் மற்றும் எடை பரிசோதனை செய்யப்பட்டதா? தரமற்ற,மட்டமான பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததார்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது? இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court