முடிந்தது பொங்கல் விடுமுறை… சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்! கடும் போக்குவரத்து நெரிசல்!
பொங்கல் விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னை திரும்பியுள்ள மக்களால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் கடந்த ஜன 14-ம் தேதி முதல் ஜன 19-ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வாசிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர் இல்லத்திற்கு போட்டிப்போட்டு கொண்டு சென்றனர்.
தற்போது பொங்கல் தொடர் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிட்டு திங்கட்கிழமை பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்லவிருக்கும் நிலையில், , பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நேற்றிரவு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து ஊர்ந்து செல்வதால், ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கே ஒருமணி நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கித் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது. நேற்று முன் தினம் முதல் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை வர தொடங்கினர். அந்த வகையில், இன்று மற்றும் நாளை வெளியூர்களிலிருந்து சென்னைக்கு அதிக போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது.