வெளியூர் செல்ல வழித்தடங்கள் அறிவிப்பு!பொங்கலுக்கு சிறப்பு வழித்தடம் ….
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வெளியூர் செல்ல வழித்தடங்கள் அறிவித்துள்ளது தமிழக அரசு .தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பொங்கலை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் செயல்படும் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தில், அதாவது சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து
புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து
நிலையத்தில் இருந்து புறப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்தவர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இடம்பெற்றுள் இடங்களுக்கு சென்று பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்,
நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com