நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் நமக்கு பெருமை.! பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.!
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் நமக்கு பெருமை என புதுச்சேரியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று புதுச்சேரியில் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி, சிதம்பரம் கோயில் விவகாரம். ஆளுநர் ரவி குறித்த கருத்துக்கள் என பல்வேறு விஷயங்களை செய்தியாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி பற்றி கூறுகையில், இந்தியாவில் உள்ள 545 தொகுதிகளிலும் எங்கு நின்றாலும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார். தமிழகத்தில் போட்டியிட்டால் தமிழகத்திற்கு அது பெருமையான ஒன்றுதான். ஏற்கனவே குஜராத், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நின்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் பிரதமர் மோடி எங்கு நிற்க வேண்டும் என்பது அவர் முடிவெடுக்க முடியாது. கட்சி தலைமை என்ன முடிவு எடுக்குமோ அதனை பிரதமர் மோடி பின்பற்றுவார். அதுதான் உள்கட்சி ஜனநாயகம் என்றும், பிரதமர் மோடி நின்று வெற்றி பெற்ற தொகுதி என்றால் அது எப்படி எல்லாம் மாறும் என்பதற்கு வாரணாசி ஒரு உதாரணம் எனவும், தமிழகத்தில் பிரதமர் மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து போன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
அடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி பேசுகையில், சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் பற்றி பாஜக கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை. பாஜக கட்சி ஒரு ஜனநாயக கட்சி. உங்களது குடும்ப கோவிலை நீங்கள் விட்டுக் கொடுப்பீர்களா? உங்களது குடும்ப கோவில் தெய்வம் எனக்கும் அது தெய்வம் தான். ஆனால் அந்த உரிமையை நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். அதுபோலதான் அங்கும் அது அவர்களது உரிமை என்று அதில் நாம் தலையிட முடியாது என்றும் தனது கருத்தை பொன் ராதாகிருஷ்ணன் முன் வைத்தார்.
ஆளுநர் பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறுகையில், ஆளுநர் திமுக உறுப்பினர் அல்ல. திமுகவின் சட்ட விதிகளுக்கு அவர் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுவார். என்று ஆளுநரை பற்றியும் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் மத்தியில் தனது கருத்துக்களை முன்வைத்து பேசினார்.