மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கல்யாண மண்டபம், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளை இயக்குவதற்கான சான்றை பெற வேண்டும் – தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.!
கல்யாண மண்டபம், ஓட்டல்கள் உள்ளிட்டவைகளை இயக்குவதற்கான சான்றை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள், நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் ஓட்டல்கள், விருந்து அரங்கங்கள் உள்ளிட்டவைகள் நிறுவ மற்றும் செயல்பட இனிமுதல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றை பெற வேண்டுமென தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றி நெடுஞ்சாலை உணவகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகள் இயக்குவது குறித்த பல உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. அதன்படி சிக்கனமாக நீர் பயன்படுத்துவது, திட மற்றும் திரவ கழிவுகளை மேலாண்மை செய்வது, நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டங்களான 1974, 1981, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, மேற்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இட வசதி, டீசல் ஜெனரேட்டர்களில் உயரமான புகைப்போக்கிகளை அமைப்பது உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் கடைப்பிடிக்க வேண்டும். அதனை உள்ளாட்சி அமைப்புகளும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் மேற்கண்ட திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், விருந்து அரங்கங்கள் உள்ளிட்டவைகள் நிறுவவதற்கான சான்றையும், செயல்படுத்துவதற்குமான சான்றையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டங்களான 1974 மற்றும் 1981 ஆகிய பிரிவுகளின் கீழ் பெற வேண்டும் என்றும், இதனை தவறுபவர்களின் நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்தவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கவும், வழக்கு தொடரவும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tndte.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்றும், அல்லது அந்தந்த மாவட்டங்களின் சுற்றுச்சூழல் பொறியாளர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.