பொள்ளாச்சி பாலியல் வழக்கு – கைதான 5 பேர் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.!
பொள்ளாச்சி ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, சேலம் சிறையில் இருந்த 5 பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பொள்ளாச்சி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கியதாக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவருக்கும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.