பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் என பேரவையில் அதிமுகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தாக்குதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுக, விசிக, சிபிஎம் உள்ளிட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் சட்டப்பேரவையில், எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், காரசாரமான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவைக்குள் அதிமுகவை சேர்ந்தவர்கள் கருப்பு நிற உடை அணிந்துகொண்டு யார் அந்த சார் என்று அச்சிடப்பட்டிருந்த சட்டையை அணிந்து வந்தனர். சட்டப்பேரவையில், எதிர்க்கட்சிகள் அண்ணா பல்கலை விவகாரத்தில் தங்களுடைய குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதை தவிர வேறு எந்த நோக்கமும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக உறுப்பினர் என்று சிலர் கூறுகிறார்கள். அவர் உறுப்பினர் அல்ல திமுக ஆதரவாளர் மட்டுமே. திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை. கண்டிப்பாக, திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம். இப்போது ஞானசேகரன் குண்டர் சட்டம் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போது புலன் விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதன்முலம் வேறு யாரும் குற்றவாளி இருக்கிறார்களா? என்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் ” மனசாட்சி இன்றி பெண்களின் பாதுகாவலர்கள் போல் பேசுகிறவர்கள் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். அந்த சம்பவத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சிபிஐ விசாரணைக்கு பிறகே அந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளியானது.
அந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக பல பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தது. யார் அந்த சார் என்று பேட்ஜ் அணிந்து வந்திருக்கும் அதிமுகவினரை பார்த்து கேட்கிறேன். உங்கள் ஆட்சியில் இதுபோன்ற 100 சார்கள் இருந்தார்களே அவர்கள் எங்கே என்ற கேள்வியை எங்களாலும் கேட்க முடியும். யார் அந்த சார் என்று விமர்சிக்கும் அதிமுகவினர் முடிந்தால் மத்திய அரசின் உதவியோடு யார் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்.
இந்த வழக்கில் அரசியல் செய்யவேண்டாம் என்று நீதிமன்றமே சொல்லியபின்னரும் அரசியல் லாபம், வீண் விளம்பரத்துக்காக அதிமுகவினர் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” எனவும் அதிமுகவை விமர்சித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.