பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?
கோவை நீதிபதி மாற்றப்பட்டாலும் பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி மே 13இல் தீர்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் 9 பேர் மீது சிபிஐ குற்றஞ்சாட்டியது, அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளனர்.
இந்த பாலியல் வழக்கு மீதான விசாரணை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன் நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் என அனைத்தும் நேற்று நிறைவுற்றதை அடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கின் மீதான தீர்ப்பு மே மாதம் 13ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி நந்தினி தெரிவித்தார்.
இந்த சூழலில் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி நேற்று காலையில் அறிவித்த நிலையில், மாலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
கோவை நீதிபதி நந்தினி தேவியை கரூர் மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமைப் பதிவாளர் நேற்று உத்தரவிட்ட நிலையில், கோவை மகளிர் நீதிமன்றம் திட்டமிட்டபடி மே 13, 2025 அன்று தீர்ப்பை வழங்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13 ஆம் தேதி தீர்ப்பை அறிவித்த பின்னரே நந்தினி தேவி, கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார். இதனால், தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.