பொள்ளாச்சி கொடூரம் ! அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக முக்கிய புள்ளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் வருகின்ற 10ஆம் தேதி அன்று பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால்,பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பின்னர் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது.மேலும் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்க்கப்பட்டது.
ஆகவே பொள்ளாச்சி பாலியல் வழக்கில்,திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் இன்று பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கீழ்மட்ட அ.தி.மு.க. நிர்வாகியுடன் பெண்ணினத்தைச் சீர்குலைத்த இந்த வழக்கை முடித்து வைத்து விடாமல் – இக்குற்றத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளையும் – மேலும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னணிப் புள்ளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி. கனிமொழி எம்.பி., அவர்கள் தலைமையில் 10.01.2021 அன்று காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட்டு – சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது – தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.