“இங்கு பாம்பு தான் அரசியல்”…தொண்டர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சொன்ன குட்டிக்கதை!!
பாம்பு எனும் அரசியலை கையில் பிடித்து விளையாடுகிறேன் நான் என த.வெ.க தலைவர் விஜய் மாநாட்டில் தொண்டர்களுக்கு குட்டி கதை கூறியுள்ளார்.
விழுப்புரம் : த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் வருகை தந்திருக்கிறார்கள். அலைமோதும் மக்கள் கூட்டத்துடன் விஜயின் பேச்சுக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்.
இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட கட்சித் தலைவர் விஜய் அரசியல் ஒரு பாம்பு எனத் தனது பேச்சை ஆரம்பித்து குட்டிஸ்டோரியை பேசத்தொடங்கினார். இது குறித்து அவர் பேசியதாவது ” ஒரு குழந்தை தன்னுடைய அம்மாவைப் பார்த்து அம்மா என்று சொல்லும் போது அந்த அம்மாவுக்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த சிலிர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அந்த அம்மாவிடம் கேட்டால் தெரியும்.
அதேபோல அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று அந்த குழந்தையைக் கேட்டால் எப்படி அதனைச்சொல்லும்? முதலில் அந்த குழந்தைக்கு எப்படிச் சொல்லத் தெரியும்? குழந்தை கிட்ட எந்த விஷயம் கேட்டாலும் குழந்தை தன்மை மாறாமல் மழலை தன்மையுடன் சிரிக்கத்தான் தெரியும். அது உணர்ந்த அந்த சிலிர்ப்பை வார்த்தையில் சொல்வதற்குத் தெரியாது. அப்படி ஒரு உணர்வோடு தான் நான் இப்போது இங்கு நிற்கிறேன்.
அதே சமயம், அம்மாவிடம் கூட தன்னுடைய உணர்வைச் சொல்லத் தெரியாத அந்த குழந்தை முன்பு ஒரு பாம்பு நிற்கிறது என்றால் என்ன நடக்கும்? தன்னுடைய அம்மாவைப் பார்த்துச் சிரித்த சிரிப்புடன் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் தன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு விளையாடும். அந்த குழந்தைக்கு பயம் இல்லையா? என்கிற கேள்வி ஒரு பக்கம் வரும்.
பாச உணர்வே இல்லாத அந்த குழந்தைக்குப் பயம் என்றால் மட்டும் எப்படித் தெரியும்? இங்கு அந்த பாம்பு தான் அரசியல். அதனைக் கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பது தான் உங்கள் விஜய். அரசியலுக்கு நாம் குழந்தை தான் என்பது மற்றவர்களுடைய கருத்து..ஆனால், பாம்பாக இருந்தாலும் அது பயம் இல்லை என்பது தான் எங்களுடைய வலிமை.
விளையாடனும்னு முடிவு செஞ்சாச்சுனா பாம்பாக இருந்தாலும் பாலிடாயிலாக இருந்தாலும் விளையாண்டுதானே ஆகனும். எனவே, கொஞ்சம் கண்டிப்போடும்..கொஞ்சம் ஜாலியாகவும் வேளைகளில் ஈடுபடுவோம்” என விஜய் பேசினார்.