பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அரசியல் தலைவர்கள் கண்டனம்.!

BSP State Leader Armstrong - Edappadi Palanisamy - K Annamalai - Thirumavalavan

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையை அடுத்து பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான தங்கள் கண்டங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி :

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

ஆர்ம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, BSP தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை :

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இன்று (ஜூலை 6) சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருடனும் பாஜகவினர் துணை நிற்கிறோம்.

கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் வன்முறை வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துவிட்டது.

விசிக தலைவர் திருமாவளவன் :

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை கொடூரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்.

ஆர்ம்ஸ்ட்ராங் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் முனைப்புடன் செயல்பட்டவர். சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்கு உரிய நபராக இருந்தவர் . இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை – எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் : 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் : 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்