அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் -மு.க. ஸ்டாலின்
பா.ஜ.க. அரசுக்கு எதிராக, நாடு முழுவதும் சமூகநீதியில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பான வழக்கில் ,ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதற்கு மறுத்திருப்பது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான வஞ்சகத்தின் வெளிப்பாடு!
குடிமைப் பணிகளில், பாரத ஸ்டேட் வங்கிப் பணிகளில், மத்திய சட்டப்பல்கலைக் கழகங்களில் எனப் பல துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி உரிமையைச் சிதைத்தது மத்திய பா.ஜ.க. அரசு.
தற்போது வங்கிப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்திற்கான 49.5% இடஒதுக்கீட்டில், முன்னேறிய வகுப்பினருக்கு 10%-ஐ பறித்தளித்துள்ளது.இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் சமூகநீதி உரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, நாடு முழுவதும் சமூகநீதியில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் 27% #Reservation-ஐ கூட வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறது பாஜக அரசு!
வங்கிப் பணிகளிலும் OBC, SC, ST பிரிவினருக்கான இடங்களை #EWS-க்கு ஒதுக்கி சமூகநீதிக்கு குழி வெட்டுகிறது!#OBCReservation-க்காக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது! pic.twitter.com/uGwaE6EVVD
— M.K.Stalin (@mkstalin) October 15, 2020