டங்ஸ்டன் திட்டம் ரத்து: ‘தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி’… அரசியல் தலைவர்கள் வரவேற்பு.!

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tungsten madurai

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அது மட்டும் இல்லாமல், இது மதுரை மக்களுக்கு கிடைத்த வெற்றி, தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். சிலர், எதிர்கட்சிகளை விமர்சித்தும், ஆளும்கட்சிகளை விமர்சித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  எம்.பி திருச்சி சிவா, “ஒன்றிய அரசு மாநிலத்தின் அதிகாரத்தை எடுத்து கொண்டு கனிமங்களை ஏலம் விடும் செயலில் ஈடுபட்டார்கள். மக்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் அது நடைமுறைபடுத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு உறுதியாகி இருந்தது” என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது. இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது. என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சு. வெங்கடேசன்

மதுரை எம்.பி, சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ” டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களின் மகத்தான வெற்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு. அனுமதியும் ஆதரவும் அளித்தது திமுக அரசு. மக்களின் எதிர்ப்பு காரணமாக பின்னாளில் எதிர்ப்பது போல நாடகமாடினார் ஸ்டாலின்.
அல்லும் பகலும் நின்று வென்றுள்ள அத்துனை கிராம மக்களுக்கும்-விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களும் பெருநன்றியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் தான் முதலமைச்சராக இருக்கும் வரை மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனச் சூளுரைத்து, சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் இயற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டிற்கும், மக்களின் உணர்வு மிகு தொடர் போராட்டத்திற்கும் அடிபணிந்து, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது தமிழ்நாடு அரசுக்கும், மக்களுக்கும் கிடைத்த பெருவெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்