ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : கைதாகும் அரசியல் பிரமுகர்கள்.! கட்சிகளின் அதிரடி முடிவு.!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அரசியல் பிரமுகர்கள், அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகியோர் பாஜக, அதிமுக, தமாகா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்ட்டார். செம்பியம் பகுதி காவல் நிலையத்தில் பதியப்பட்ட இந்த கொலை வழக்கில் முதற்கட்டமாக பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் காவல்துறையால் கைது செய்ப்பட்டனர்.
இதில் கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று திருவேங்கடம் காவல்துறையினரை தாக்கி தப்ப முயன்ற காரணத்தால் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்களை விசாரணை செய்து அவர்கள் மூலம் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது.
முதற்கட்டமாக, முன்னாள் அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, முன்னாள் தமாகா பிரமுகர் ஹரிஹரன், திருவள்ளூர் திமுக பிரமுகர் மகன் சதீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் பாஜக சென்னை மேற்கு மாவட்ட துணை தலைவர் அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த அஞ்சலையை ஓட்டேரி பகுதி போலீசார் நேற்று கைது செய்தனர். இதே கொலை வழக்கில் தொடர்புடைய ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த மற்றொரு நபரும் கைது செயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைதாகும் அரசியல் பிரமுகர்களை அந்தந்த கட்சி தலைமை நீக்கி வருகிறது. முன்னதாக அதிமுகவை சேர்ந்த மலர்க்கொடியை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தரமாக நீக்கி அறிக்கை வெளியிட்டார். அதே போல ஹரிஹரனை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கட்சியில் இருந்து நீக்கினார். அடுத்து போலீசாரால் தேடப்பட்டு வந்து நேற்று கைதான அஞ்சலையை முன்னதாக பாஜகவில் இருந்து நீக்கி அக்கட்சி நிர்வாகி கரு.நாகராஜன் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.