இணையம்வழி பல பெண்களுக்கு பாலியல் தொல்லைகொடுத்த காவலர்..!கணவருக்கு எதிராக புகார் அளித்த மனைவி..!
பல பெண்களிடம் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலர் முத்துசங்குக்கு எதிராக அவரது மனைவி புகார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் காவலர் முத்துசங்கு. இவருக்கு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பொறியியல் பட்டதாரி சுபாஷினியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன் தான் ஒரு சார்பு ஆய்வாளர் என்று பொய்யுரைத்துள்ளார். மேலும், வரதட்சணையாக 1 லட்சம் ரொக்கப்பணமும், 25 சவரன் நகையும் வாங்கியுள்ளனர். திருமணம் முடிந்த 3 மாதத்திலேயே மேலும் வரதட்சணை கேட்டு காவலர் முத்துசங்கு சுபாஷினியை துன்புறுத்தியுள்ளார்.
இதனால் தாய் வீட்டிற்கு வந்த சுபாஷினி தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்காத நிலையில் மீண்டும் முத்துசங்கு பெண்வீட்டாருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதனால் கணவருடன் சென்று வாழ்ந்துள்ளார். வீட்டிற்கு வந்த சுபாஷினியை பல்வேறு விதமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் முத்துசங்கு. மேலும், முத்துசங்குவின் மொபைல் போனை ஆய்வு செய்த சுபாஷினி அதிர்ந்து போய்விட்டார்.
முகநூலில் பல்வேறு பொய் கணக்குகளை உருவாக்கி 15-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆபாசமாக பேசியிருப்பதும், அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களிடம் அந்தரங்க புகைப்படத்தை வாங்கி வைத்து பின்னர் மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றிருப்பதையும் சுபாஷினி கண்டுபிடித்துள்ளார். இதில் திருமணமான பெண்கள், இளம்பெண்கள் என 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணத்தால் சுபாஷினி, பாலியல் தொந்தரவு கொடுக்கும் கணவர் முத்துசங்கு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தற்போது இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.