அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்-டிஜிபி சைலேந்திரபாபு..!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்த அரை மணி நேரத்திற்குள் காவல்துறை சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் மூலமாக குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சொந்தங்களிடமிருந்து உடனடியாக எழுத்து புகார் பெற்று அவர்களுக்கு சி.எஸ்.ஆர் வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தும் போது சந்தேக நபர்கள் உடன் இருக்கக்கூடாது எனவும் குழந்தைகள் தேர்வு செய்யும் இடத்தில் விசாரணை நடைபெற வேண்டும். விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் பெற வீட்டிற்கு செல்லும் போது வாகனத்தில் சைரனை பயன்படுத்த கூடாது எனவும் சாதாரண உடை அணிந்து வாக்குமூலம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.