மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீசார் மனு….!
நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
கடந்த 14-ஆம் தேதி பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் தனது நண்பர் சாம் அபிஷேக் உடன் அடைக்கப்பட்டுள்ள மீரா, தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குறுகிய காலமே ஆகியுள்ளதால் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது இது தொடர்பாக எம்.கே.பி நகர் போலீசார் மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக எழும்பூர் பத்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், அவதூறு வழக்கில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எம்.கே.பி நகர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.