‘காவல்துறை உங்கள் நண்பன்’ – பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்..!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்ககை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், அந்த இளைஞன் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்ககை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். ராஜேச்வரியை பாராட்டி முதல்வர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிர்வாகத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல, பருவமழைக் காலத்துப் பேரிடர் நேரத்தில், மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பெருமழையில் சிக்கித் தவித்து, முறிந்து விழுந்த மரத்தின் கீழே சுயநினைவின்றிக் கிடந்த உதயா என்பவரின் உயிர் காக்கும் முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு, கோல்டன் ஹவர் எனப்படும் அந்தப் பொன்னான நேரத்தைச் சரியாக உணர்ந்து, அவரைத் தோளில் சுமந்து, ஓடிச் சென்று, ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரை உயிர் பிழைக்க வைத்த தங்களின் அர்ப்பணிப்பு மிக்க கடமையுணர்வும், சீருடைப் பணியாளர்களுக்குரிய ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்குரியவை.

தடகளப் போட்டிகளில் சிறந்த வீராங்களையாக சாதனைகள் பல புரிந்ததுடன், 1992 கும்பகோணம் மகாமகத்தின் போது ஏற்படுத்தப்பட்ட நெரிசலில் உயிருக்குப் போராடியவர்களை மீட்பதில் தாங்கள் ஆற்றிய பணி எந்நாளும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

காவல் பணியில் எளிய மக்களின் துயர் துடைக்கும் கரங்களாக தங்களுடைய செயல்பாடு பல முறை அமைந்துள்ளது. கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையிலிருந்த பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் அவர்களைச் சேர்ப்பது, குற்றவாளிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எனத் தங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவும் காவல்துறை உயரதிகாரிகளின் பாராட்டுகளுக்கும் பொதுமக்களின் வாழ்த்துகளுக்கும் உரியவையாக, அமைந்துள்ளன.

சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரான திருமதி. இராஜேஸ்வரி ஆகிய தங்களின் மனிதாபிமான செயல்பாடு, தங்களைப் போன்ற மனிதாபிமானம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் என்ற முறையிலும், மழைக்காலப் பேரிடர் நேரத்தில் தொடர்ச்சியாகப் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தவன் என்ற முறையிலும் தங்களின் மனிதாபிமானமிக்க உயிர்க் காப்புப் பணிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பதற்கேற்ப கம்பிரமாகவும் கருணை உள்ளத்துடனும், தாங்கள் மேற்கொண்ட பணி, காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கக் கூடியதாகும்.

தங்களின் சேவைக்கு வாழ்த்துகள்! சட்டத்தையும் மக்களையும் காக்கின்ற பணி தொடரட்டும்!’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்