காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!
காவல் ஆய்வாளரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், அந்த இளைஞன் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இந்த நிலையில், காவல் ஆய்வாளரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.