சிவசங்கர் பாபாவுக்கு உதவிய 2 ஆசிரியைகள் மீது போக்சோ வழக்கு…!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவுக்கு உதவிய சுசில் ஹரி பள்ளியின் 2 ஆசிரியைகள் மீது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து,மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.ஆனால்,சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை.
அதன்பின்னர்,சிவசங்கர் பாபா நெஞ்சு வலி காரணமாக உத்தரகாண்டின்,டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று சிவசங்கர் பாபாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகினார்.
இதனையடுத்து,பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர்,சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,சிவசங்கர் பாபாவை பிடிக்க தனிப்படை போலீசார்,இன்று டேராடூனுக்கு விரைந்துள்ளனர்.
மேலும்,சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, சி.பி.சி.ஐ.டி.போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும்,லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவுக்கு உதவிய அப்பள்ளியின் ஆசிரியைகளான பாரதி,தீபா ஆகிய இருவர் மீதும்,போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி.போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து,சிவசங்கர் பாபாவுக்கு உதவியது தொடர்பாக,மாணவிகள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் திட்டமிட்டுள்ளனர்.