“நான் என்ன தீவிரவாதியா?” சீரிய தமிழிசை! கைது செய்த போலீசார்!
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் தடுப்பு காவலில் கைது செய்துள்ளனர்.

சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய அரசு இந்தி மொழியையே திணிக்க பார்க்கிறது என தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளும் திமுக அரசு மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தில் இணையாததன் காரணமாக தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என தொடர் குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறது.
தமிழக பாஜக சார்பில், மற்ற தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மும்மொழி படிக்கிறர்கள் அதே போல அரசு பள்ளிகளிலும் மும்மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்றும், இதனை திமுக அரசு தடுக்கிறது என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை அடுத்து மக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னர் அறிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார். பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி போலீசார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து பொதுமக்களுக்கு இடையூறாக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள் என அதனை தடுத்தனர். தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்துவோம் என தமிழிசை கூறியதால் அவரை தடுப்பு காவலின் கீழ் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்போது பேசிய தமிழிசை, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அமைதியான முறையில் மக்களிடம் கையெழுத்து பெறுவதை ஏன் தடுக்கிறீர்கள், நான் என்ன தீவிரவாதியா? பொதுமக்கள் கையெழுத்திட வந்தால் அதனை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? நாங்கள் தமிழ் மொழிக்காக போராடுகிறோம். பாமர மக்களுக்காக போராடுகிறோம். பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் கூட தமிழ்நாட்டில் நடத்த முடியவில்லை என்றால் எப்படி?
நான் கையெழுத்து வாங்கிவிட்டு தான் செல்வேன். அமைதியாக கையெழுத்து வாங்குவதை கலவரமாக்குவது நீங்கள் (போலீஸ்) தான். நான் வரமாட்டேன். பொதுமக்களை கையெழுத்து போட விட மறுக்கிறீர்கள். சாமானிய மக்கள் 3 மொழி படிக்க வைக்க வேண்டும் என நாங்கள் போராடுகிறோம். என கூறினார். காவல்துறை தரப்பில், நீங்கள் அனுமதி வாங்கியிருந்தால் பரவாயில்லை. ஆனால், நீங்கள் அனுமதி வாங்கவில்லை என கூறி கைது செய்ததால் அங்கு பாஜகவினர் – காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.