முககவசம் அணியாத தம்பதியிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
திருப்பூரில் முககவசம் அணியாத தம்பதியிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது வெளியில் செல்லக் கூடிய நபர்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும் எனவும் மீறுபவர்கள் அபராதம் கட்ட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலரான நடராஜன் மற்றும் ஆயுதப் படைப் பிரிவை சேர்ந்த காசிராஜனும் பெருமாநல்லூரில் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
மாஸ்க் அணியாமல் சென்றதற்காக இவர்களுக்கு அபராதம் விதித்த காவலர் காசிராஜன் அவர்களது முகவரியை நோட்டில் எழுதும் பொழுது என்ன ஜாதி என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அந்த வாக்குவாதம் நடைபெற்றதையும் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகி காசிராஜாவுக்கு கடும் கண்டனம் எழுந்ததால், காவலர் காசிராஜன் தற்பொழுது ஆயுதப்படைக்கு இடம் மாற்றப்பட்டு உள்ளார்.