கற்பை காக்க கத்தி குத்து – கொலை செய்த இளம்பெண்ணுக்கு விடுதலை என காவல்துறையினர் அறிவிப்பு!
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞனை கத்தியால் குத்திவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த இளம்பெண் கவுதமிக்கு விடுதலை.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தில் 19 வயதான கவுதமி எனும் இளம்பெண்ணுக்கு அவரது உறவினர் அஜித்குமார் என்பவரால் இரவு நேரத்தில் வெளியில் சென்ற போது கத்தி முனையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதால், அஜித்குமாரின் கையிலிருந்த கத்தியை பறித்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கவுதமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
அதன் பின் காவல்நிலையத்தில் நடந்ததை கூறி கத்தியுடன் சரணடைந்தார் கவுதமி. இந்நிலையில், கவுதமி தனது உயிரை தற்காத்து கொள்வதற்காக இந்த கொலையை செய்ததால் அவரை கைது செய்யாமல் விடுதலை செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கூறியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள், 302 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை மாற்றி, இந்திய தண்டனை சட்டம் 100 தற்காப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து நீதிமன்றத்தில் தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் இந்திய தண்டனை சட்டம் 100 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இளம்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.