நச்சுச் சாராய மரணம்..! கடும் நடவடிக்கை தேவை – விசிக தலைவர் அறிக்கை

thirumavalavan

கள்ளச் சாராயத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை.

மதுவிலக்கைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் மரக்காணம் அருகிலுள்ள எக்கியார்குப்பத்தைச் சார்ந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதுபோலவே செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் நச்சுச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எமது அஞ்சலியையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்ச, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக அறிவித்த முதலமைச்சருக்கு எமது நன்றி.

இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான கள்ளச்சாராய வியாபாரிகள மட்டுமின்றி, அதை உற்பத்தி செய்கிறவர்களையும் , விநியோகிப்பவர்களையும் கண்டறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மது விலக்கு என்பது மாநில அதிகாரத்தின் கீழ் வருவதால் தமிழ்நாடு அரசு மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறோம்.

எனினும் மது விலக்கு என்பது அரசாங்கம் மட்டுமே சாதித்துவிடக்கூடிய ஒன்றல்ல என்பதை அறிவோம். மக்களின் ஒத்துழைப்பும் அதற்கு இன்றியமையாததாகும். தற்போது மதுவிலக்கு நடைமுறையில் உள்ள குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் கள்ளச் சாராயத்தால் ஏற்பட் டுவரும் உயிரிழப்புகள் அதைத்தான் காட்டுகின்றன.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் மக்கள் நலன்களைப் பாதுகாப்பதாக அமையும். கள்ளச்சாராயம் பெருகுமென காரணம் காட்டி அரசே மதுவணிகத்தில் நேரடியாக ஈடுபடுவதை நியாயப்படுத்திட இயலாது. கள்ளச்சாராய வணிகத்தையும் கட்டுப்படுத்திட வேண்டும். அதே வேளையில் மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்திட வேண்டும். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே தீவிரமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மதுவால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான். எனவே மகளிர் சுய உதவிக் குழுக்களைக்கொண்டு இதற்கான பரப்புரையை மேற்கொள்ளலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசு திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் எனவும் விசிக தலைவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்